Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Saturday, January 5, 2008

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ல் துவங்குகின்றன: மார்ச் 25ல் பத்தாம் வகுப்புக்கு ஆரம்பம்: அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் நேற்று வெளியிட்ட பொதுத் தேர்வு அட்டவணை விவரங்கள்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை விவரங்களை, அரசு தேர்வுத்துறை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. உயர் கல்வியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதால், பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தே உயர் கல்வியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்களும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடியதாக விளங்குகின்றன. அதை மனதில் கொண்டு அரசு தேர்வுத்துறை, அட்டவணையை தயாரித்துள்ளது. அறிவியல் பிரிவு மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடைவெளி வரும் வகையில் அட்டவணையை உருவாக்கியுள்ளது. மொழித்தாள் தேர்வுகளுக்குப் பிறகு, மார்ச் 10ம் தேதி காலை இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதற்கு பிறகு, இரண்டு நாள் இடைவெளி தரப்பட்டுள்ளன. 13ம் தேதி வேதியியல் தேர்வும், ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மைக்ரோ-பயாலஜி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி தேர்வும் நடைபெறுகின்றன. மீண்டும் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு 17ம் தேதி கணிதத் தேர்வும், விலங்கியல் தேர்வும் நடைபெறுகின்றன. அத்துடன் 20ம் தேதி உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. இப்படி முக்கிய பாடத் தேர்வுகளில், மாணவர்கள் கடைசி நேரத்தில் நல்ல முறையில் தயாராகும் வகையில் போதிய இடைவெளி விட்டு சிறப்பான முறையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அறிவியல் மற்றும் கணிதப் பிரிவு மாணவர்கள், ஒரு தேர்வை முடித்ததும் அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அதேபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் போதிய இடைவெளியுடன் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான், அறிவியல் மற்றும் கணித `குரூப்'கள் கிடைக்கும். இல்லையென்றால், கலைப்பாடப் பிரிவுகளில் சேர வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு மொழிப்பாடத் தேர்வுகளை தவிர்த்து, இதர பாடங்களுக்கு போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்முறை தேர்வு எப்போது?: பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் ஆரம்பமாகும். இந்த தேர்வை பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு தேதிகளில் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். எனினும், குறிப்பிட்ட தேதியில் துவங்கி, முடிக்குமாறு தேர்வுத்துறை அறிவுறுத்தும். செய்முறைத் தேர்வு, பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும் என்றாலும், சரியான தேதியை இன்னும் தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. செய்முறைத் தேர்வு முடிந்து இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு எழுத்துத் தேர்வு துவங்கி விடும். பிளஸ் 2 தேர்வு மாணவிகளே அதிகம்!: பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், `மொத்தம் ஐந்து லட்சத்து 95 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், மாணவர்கள் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் பேர்; மாணவிகள் மூன்று லட்சத்து 12 ஆயிரம் பேர்' என்றார். மாணவர்களை விட மாணவிகள் 29 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை எட்டு லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சரியான புள்ளி விவரம் ஓரிரு நாளில் தெரிய வரும். தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால், தேர்வுகளை நடத்துவதற்கான வேலைகளிலும் தேர்வுத் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஆங்கிலோ இந்திய தேர்வை பொறுத்தவரை, மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையே பெரும்பாலும் பொருந்துகிறது. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு மார்ச் 25ம் தேதி மொழித் தாள் தேர்வு நடைபெறும். இந்த மாணவர்களுக்கு மொழி இரண்டாம் தாள் தேர்வு கிடையாது. எனவே, 25ம் தேதிக்குப் பிறகு 27ம் தேதி ஆங்கில முதற்தாள் தேர்வு நடைபெறும். மற்ற தேர்வுகள் அனைத்தும், மெட்ரிகுலேஷன் அட்டவணையே ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: