Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, December 17, 2007

மெரீனாவில் கடற்படை சாகச நிகழ்ச்சிகள்: லட்சக்கணக்கானோர் கண்டு களிப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று மாலை நடந்த கடற்படையின் சாகச நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



இந்திய கடற்படை 1971ம் ஆண்டு கராச்சி துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. இதை நினைவு கூற ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பரில் கடற்படை வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படை சார்பில் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.

இதை காண மெரீனா கடற்கரை முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இதற்காக காந்தி சிலைக்கு நேர் எதிரே சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வந்ததும் நிகழ்ச்சி துவங்கியது.

இந்திய தேசியக் கொடியையும், கடற்படையின் சின்னம் பொறித்த கொடியையும் ஏந்தியபடி இரண்டு `சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் அணி வகுத்து சென்றன. ஐ.என்.எஸ்., பிரிவைச் சேர்ந்த குதார், கஞ்சர், கோரா, கிர்ஷ், கர்மக், ஜோதி, ராஜ்புத், ரன்விஜய், ஜலஸ்வா ஆகிய போர் கப்பல்கள் கடலில் அணி வகுத்து வந்தன. மூன்று சுமோவ் - 25 ரக ஹெலிகாப்டர்கள், ராஜ்புத் ரக கப்பல்களில் இறங்கின. எப்.ஏ.சி., என்ற கப்பல் அதி வேகமாக சென்று வியக்க வைத்தது.

மார்கோஸ் என்னும் கடற்படையின் அதிதீவிர வீரர்கள் பதுங்கு குழியில் மறைந்திருக்கும் எதிரிகளை தாக்குவது, எதிரி நாட்டின் எண்ணெய் கிணற்றை அழிப்பது செய்து காண்பிக்கப்பட்டது. தரைப் படை வீரர்களுக்கு டாங்குகள், இதர உபகரணங்களை கொண்டு வந்து தர பயன்படுத்தப்படும் எல்.ஏ.சி., என்ற சிறிய படகும் சாகசம் புரிந்தது.

சாகர் பவான் விமான சாகச அணியினரின் நிகழ்ச்சி நடந்தது. நான்கு கிரண் ரக விமானங்கள் பல வித்தைகளை செய்து காட்டின. இதில் ஒரு விமானத்தின் பைலட் சென்னை கொரட்டூர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விமானங்கள் அதிக வேகத்தில் நேருக்கு நேராக வந்து கடைசி நேரத்தில் பிரிந்து சென்றதை மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர். இந்த விமானங்கள் வானில் காதலர் சின்னம் `ஹார்ட்' வரைந்து அதில் அம்பு விட்டு காண்பித்தன.

இரண்டு சேத்தக் ஹெலிகாப்டர்கள், இரண்டு கமோவ் ஹெலிகாப்டர்கள், டார்னியர் ஹெலிகாப்டர், டி.யு.,142 ரக விமானம் ஆகியவை அணி வகுத்து சென்றன. வேவு பார்க்க பயன்படும் சிந்து நாத் என்ற நீர் மூழ்கி கப்பல் வந்தது. வர்த்தக கப்பலுக்கு ஹெலிகாப்டர் மற்றும் சிறிய படகு மூலம் வீரர்கள் சென்று, சோதனை நடத்தி, போதைப் பொருட்களை கைப்பற்றும் நிகழ்ச்சி ஐ.என்.எஸ்., ஜோதி போர் கப்பலில் செய்து காண்பிக்கப்பட்டது. போர் முடிந்து தளம் திரும்புவோரை வரவேற்க நிகழ்த்தப்படும் இசை நிகழ்ச்சியை, கடற்படை இசைக் குழுவினரின் நடத்தினர். கடற்படை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கப்பட்டதும், போர் கப்பல்களில் விளக்குகள் எரிய விடப்பட்டன. தேசிய கீதத்திற்கு பிறகு அவற்றில் இருந்து வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

சென்னை மெரீனா கடற்கரையில் இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு இருபுறங்களிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு சாகச நிகழ்ச்சியையும் ஆரவாரத்துடன் கைதட்டி ரசித்து பார்த்தனர்.

source : Dinamalar

No comments: