Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, December 18, 2007

குவைத்தில் உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்கள்

பணி புரிந்த நிறுவனத்திடம் சம்பளம் கேட்டு போராடியதற்காக 40 தமிழர்கள் உட்பட, 120க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உண்ண உணவு, உடுத்திக் கொள்ள உடைகள் என எந்த வசதியும் இல்லாமல் மறைவிடத்தில் வாழ்ந்து வரும் சோக சம்பவம் குவைத்தில் நிகழ்ந்துள்ளது.



போலி வாக்குறுதிகளை நம்பி, இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று, ஏமாந்து திரும்பும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் அங்கு அனுபவிக்கும் கொடுமைகளும் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது.

சமீபத்தில் குவைத்தில் நடந்த சோக சம்பவம் பற்றிய விவரம்: கடந்த 2004ல், 120க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர். இவர்களில் 40 பேர் தமிழர்கள். வழக்கம்போலவே, இவர்களுக்கும் கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என ஆசை வார்த்தை காட்டப்பட்டது. கனவுகளை சுமந்துகொண்டு குவைத்தில் காலடி எடுத்து வைத்தனர். அங்குள்ள ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன், பிளம்பர் என பல பிரிவுகளில் வேலை கிடைத்தது. முதல் மாதம் முடிந்ததும் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருந்த இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே கூறப்பட்டபடி சம்பளம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் இவர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை. விரக்தி அடைந்த தொழிலாளர்கள், கடந்த 2005ல் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

போராட்டத்துக்கு தலைமை வகித்த சிலர் கைது செய்யப்பட்டனர். வலுக்கட்டாயமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மற்ற தொழிலாளர்களுக்கும் பயம் ஏற்பட்டது. தொழிலாளர்களிடம் பேச்சு நடத்திய நிர்வாகிகள், `கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறது. அதனால் தான் சம்பளம் கொடுக்க முடியவில்லை' என சமாதானப்படுத்தியுள்ளனர். மாதங்கள் கழிந்தாலும், சம்பளம் மட்டும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கடந்த அக்டோபரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபம் அடைந்த நிறுவனத்தினர், தொழிலாளர்களின் உடைமைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு, அவர்களை நடுத் தெருவுக்கு துரத்தி அடித்து விட்டனர். பாஸ்போர்ட், அடையாள அட்டை என அனைத்தும் பறிபோன நிலையில் உயிர் பயத்துடன் தற்போது அவர்கள் மறைவிடங்களில் வசித்து வருகின்றனர். மாற்றிக் கொள்ள உடை, உண்ண உணவு எதுவும் இன்றி தவித்து வருகின்றனர். முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல், குவைத்தில் நடமாடுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம். இதனால், எந்த நேரமும் போலீசார் நம்மை கைது செய்துவிடுவார்களோ என்ற பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்னர், என் தாயார் இறந்து விட்டார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நிறுவனத்திடம் அனுமதி கேட்டேன். அவர்கள் தரவில்லை. எனது பாஸ்போர்ட்டையும் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால், ஊருக்குச் செல்ல முடியவில்லை. நான் மட்டுமல்ல. இங்குள்ள பலருக்கும் இதே நிலைதான்," என்றார்.

இவர்களில் பலர், ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என்பது தான் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

கணேசன் என்ற தொழிலாளர் கூறுகையில்,"வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அதிகம் சம்பளம் கிடைக்கும், வீட்டுக்கு பணம் அனுப்புவேன் என எனது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், இங்குள்ள நிலைமை அவர்களுக்கு தெரியாது. எனது தேவையை நிறைவேற்றுவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. பின் எப்படி வீட்டுக்கு பணம் அனுப்ப முடியும்?" என்கிறார்.

இது தொடர்பாக, பணிபுரிந்த நிறுவனத்தை எதிர்த்து குவைத் கோர்ட்டில் தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் தெரிகிறது. உள்ளூர் அமைப்புகளை சேர்ந்த சிலர், இவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, தங்களது நிலையை விளக்கி இந்திய துாதரகத்துக்கு முன் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். கடந்த 11ம் தேதி, தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்த போலீசார், 29 பேரை தாக்கி, கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மற்ற தொழிலாளர்கள் பீதியுடன் உள்ளனர். தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடனேயே, இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது என தொழிலாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக இந்திய தூதரகம் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தொழிலாளர்கள் தரப்பு வக்கீல் நாசிர் பதர் அல்-முடாய்ரி கூறுகையில், "துபாயில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. பல தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை மீறி ஓடிப் போய்விட்டதாக அந்த நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்கள் குடியிருப்பில் வசிப்பதற்கான அனுமதியும் காலாவதியாகி விட்டதாக புகார் செய்துள்ளனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்காதது தொடர்பான பிரச்னை, தொழிலாளர் மற்றும் சமூக விவகார துறை அமைச்சகங்களின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இம்மாதம் 24ம் தேதி நடக்கவுள்ளது," என்றார்.

இந்திய தூதரக செய்தி தொடர்பாளர் மகாஜன் கூறுகையில்,"இந்த விவகாரம் தொடர்பான முழு விவரங்களையும் விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும், தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சுமுகமான தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். ஆனால், சமீபத்தில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்கள், பிரச்னையை பெரிதாக்கி விட்டன," என்றார்.

ஏராளமான கனவுகளுடன் கடல் கடந்து, பிழைப்பு தேடி வந்துள்ளனர் இந்த தொழிலாளர்கள். இவர்களது கனவுகளையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், சிக்கலுக்கு ஆளாகி இருப்பது 120 தொழிலாளர்கள் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அவர்களது ஏழைக் குடும்பங்களும் தான்

 

 

Source : Dinamalar

No comments: