Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Wednesday, January 7, 2009

வைகுண்ட ஏகாதசி: வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு : தினமலர்

வைகுண்ட ஏகாதசி: வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு : தினமலர்: "வைகுண்ட ஏகாதசி: வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு

ஜனவரி 07,2009,00:00 IST

இன்று வைகுண்ட ஏகாதசி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது. ஸ்ரீரங்கம் , திருப்பதி, தூத்துக்குடி நவதிருப்பதி உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் பக்தர்களின் கரகோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு பிளந்தது. அதனைதொடர்ந்து சுவாமி அவ்வழியே சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில்களில் வெளிமாநில பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குவிந்தனர். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சரியாக காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று அதிகாலை, வைகுண்ட ஏகாதசி மகோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்வாசல் திறப்பு நடைபெற்றது. துவாரக பாலர்கள் அனுமதி கிடைத்த பிறகு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற மனமுருகி கோஷம் எழுப்ப , உடல் முழுதும் ரத்தின அங்கியுடன் , பாண்டியன் கொண்டையும் அணிந்து எம் பெருமான் சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் தங்க கொடி மரத்தை சுற்றி வந்து தீர்த்த மண்டபத்தை அடைந்தார். சொர்க்வாசல் திறப்பு நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மனைவி மற்றும் மகன்கள், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திருச்சி மேயர் சாருபாலா உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சொர்க்கவாசில் திறப்பான இந்நாளில் அதன்சிறப்பு விஷயங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக்கள் விவரம் வருமாறு :


நாமம் என்ற பெயர் வந்தது எப்படி?


மஹாவிஷ்ணுவுக்கு 12 நாமங்கள் பிரசித்தமானவை. கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்பவையே இந்த நாமங்கள். சகஸ்ர நாமம் என வழங்கப்படும் ஆயிரம் திருநாமங்கள், திரிசதி எனப்படும் முந்நூறு நாமங்கள், அஷ்டோத்ர சதம் எனப்படும் 108 நாமங்கள் முதலியன சொல்லி பெருமாளை வழிபட்டாலும், அர்ச்சனையின் முடிவில் இந்த பன்னிரண்டு பெயர்களான துவாதச நாமங்களைச் சொல்லியே முடிக்க வேண்டும். சகஸ்ரநாமம் முதலியன சொல்ல இயலாதவர்கள் இந்த பன்னிரண்டுநாமங்களைச் சொன்னாலே கூட போதுமானது. மஹாவிஷ்ணுவிற்கு 12 நாமங்கள் எப்படி முக்கியமோ, அதுபோல அடியார்களுக்கு நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் மிகவும் முக்கியம். பக்தர்கள் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ் வொன்றாகச் சொல்லி, ஒவ்வொன்றுக் கும் அடையாளமாக உடம்பின் ஒவ்வொரு இடத்திலும் திருமண் இட்டுக் கொள்வர். இந்த பன்னிருநாமங்களை. உடம்பில் திருமண் (நாமக்கட்டியால் போடுவது) சின்னம் இடும் போது, விஷ்ணுவின் நாமாக்களைச் சொல்லி இட்டதால் தான், திருமண் சின்னத்திற்கு ''நாமம்'' என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.


விரதமிருந்த ராஜாக்கள்


ராஜாக்கள் என்றாலே போகவாழ்வில் ஈடுபடுபவர்கள். மது,மாமிசம் சாப்பிடுவது ராஜாக்களுக்கு புதிதல்ல. ஆனால், விரதம் முதலிய அனுஷ்டானங் களைப் பின்பற்றிய ராஜாக்களும் பூமியில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஏகாதசி விரதம் இருந்த காரணத்தால் அம்பரீஷன், ருக்மாங்கதன் என்ற இரண்டு ராஜாக்கள், நாராயண பக்தர் களின் வரிசையில் இடம் பெற்றார்கள்.


தினமும் காலையில் எழுந்ததும் அதிகாலைப் பொழுதில் சொல்ல வேண்டிய பரமபாகவதர்களைப் (நாராயண பக்தர்கள்) பற்றிய ஸ்லோகம் ஒன்று உண்டு.


ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக
வியாச அம்பரிஷ சௌநக பீஷ்ம தால்ப்யான்!
ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட வீபிஷ்ணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி!!


இதில் அம்பரீஷனும், ருக்மாங்கதனும் இடம்பெற்றதற்கு காரணம், அவர்கள் இருவரும் ஏகாதசி விரதம் இருந்ததன் பயன் தான். இதில் மன்னன் ருக்மாங்கதன் தன் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். இதனால், மக்கள் பக்திமான்களாக ஒழுக்கத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார்கள்.


பசி தாங்கமுடியாதவர்களுக்கும் ஏகாதசி விரதம் கட்டாயம்


காயத்ரி மந்திரத்திற்கு மேலே ஒரு மந்திரமில்லை. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. கங்கைக்கு மேலே ஒரு தீர்த்தம் இல்லை. ஏகாதசி விரதத்திற்கு ஈடான விரதம் ஏதுமில்லை என்பர். சாஸ்திரப்படி மக்கள் அனைவரும் இவ்விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். எட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டும் ஏகாதசி விரதத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற அனை வரும் ஏகாதசி விரதத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும். வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியிலாவது கட்டாயம் விரதம் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். பசியே தாங்காத பீமன் கூட ஏகாதசி விரதத்தை பின்பற்றியதாக பாரதக்கதை குறிப்பிடு கிறது. அவன் வியாசரிடம் கலந்தாலோ சித்து, வருஷத்தில் ஒரு ஏகாதசி மட்டும் முழுமையாக பட்டினிவிரதம் இருந்துள்ளான்.


உபவாசமும் ஹரிகதையும்


ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று உபவாசம் என்னும் விரதம். மற்றொன்று ஹரிகதை(பக்திக்கதை) கேட்பது. 'உபவாசம்' என்றால் 'பட்டினியாக இருத்தல்' என்ற பொருள் மட்டுமல்ல. இதற்கு ''கூட வசிப்பது'' என்றும் ஒரு பொருள் உண்டு. இறைவனுடன் வசிப்பது..அதாவது அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு அவனோடு வசிப்பது தான் நிஜமான உபவாசம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆரோக்கிய விதியைப் பின்பற்றவும் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது உணவே வயிற்றுக்கு எதிரியாகி விடுகிறது. பலவியாதிகளுக்கு உணவும் காரணமாக இருப்பதைக் காணலாம். இன்று டாக்டர்கள் உணவு கட்டுப்பாட்டை மருத்துவ ரீதியாக கடைபிடிக்கச் சொல்வதன் காரணமும் இதுவே. மற்றொரு செயல் பக்திக்கதைகளைக் கேட்பதாகும். பக்தபிரகலாதன் தன் வயிற்றில் இருக்கும்போதே நாராயணனின் கதையைக் கேட்டதால் தான் பக்தியில் சிறந்து விளங்கினான். ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் பக்திகதைகளைக் கேட்பது, பகவானின் திருநாமங்களைப் பஜனையாகப் பாடுவது, தோத்திரங்களைப் பாராயணம் செய்வது ஆகியவை மிகப் புண்ணிய பலன்களைத் தரும்.


கீதை ஜெயந்தி




''மாதங்களில் நான் மார்கழி'' என்பது கீதைநாயகன் கண்ணனின் வாக்கு. இம்மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசியாகும். இந்தநாளை பத்ம புராணம் 'மோட்ச ஏகாதசி' என்று குறிப்பிடுகிறது. பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அதை தேவர்களுக்கு கொடுப்பதற்காக மகாவிஷ்ணு மோகினி அவதாரம் செய்த நாளே வைகுண்ட ஏகாதசி. அதோடு மட்டுமல்லாமல், வேதத்தின் பிழிவான உபநிடதங்களை கடைந்தெடுத்த ஞானமிர்தமான கீதையை கிருஷ்ணர் உலகிற்குக் கொடுத்ததும் அன்றுதான். அதனால் தான் அன்றைய நாளை 'கீதை ஜெயந்தி'என்றும் கொண்டாடுகிறார்கள்.




பரமபத வாசல் இல்லாத பரமபத கோயில்




ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகிய திவ்யதேசங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான பாசுரங்களைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம்(திருவாரூர் மாவட்டம்) சவுரிராஜப் பெருமாள் கோயில். கண்டவர் தம் மனம் உருக்கும் இப்பெருமாளை, நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர். பஞ்சகிருஷ்ண தலங்களில் திருக்கண்ணபுரமே முதன்மையானது. இத்தலம் 'கீழைவீடு' என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் 'மேலைவீடு' எனப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாட்களும், பின்பு பத்துநாட்களுமாக பெருமாள் கோயில்களில் பகல்பத்து, இராப்பத்து எனப்படும் மார்கழி அத்யயன உற்சவங்கள் இங்கு சிறப்பாக நடை பெறும். எம்பெருமானைத் தரிசிப்பவர்கள் வைகுந்தம் பெறுவர் என்பதை நம்மாழ்வார் தம் பாசுரத்தில் 'சரணமாகும் தனதாள் அடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்' என்று குறிப்பிட் டுள்ளார். எனவே இந்தக் கோயிலே பரமபதமாக மதிக்கப் படுகிறது. எனவே இங்கு பரமபதவாசல் தனியாகக் கிடையாது. வைகுண்ட ஏகாதசி நாளில் இப்பெருமாள் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி ஆழ்வார்களுக்கு சேவை சாதிக்கிறார்.




நவதிருப்பதி தரிசனம்


தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதி என்னும் ஒன்பது பெருமாள் தலங்கள் உள்ளன. இத்தலங்கள் ஒன்பதையும் ஏகாதசி நாளில் தரிசிப்பது சிறப்பாகும். இத்தலங்கள் நவகிரகத் தலங்களாகவும் அமைந்துள்ளன.




சூரியன்-வரகுணமங்கை(நத்தம்)
சந்திரன்-திருப்புளியங்குடி
செவ்வாய்-திருக்குளந்தை(பெருங்குளம்)
புதன்-திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வியாழன்-திருக்கோளூர்
சுக்கிரன்-ஸ்ரீவைகுண்டம்
ராகு-இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்)
கேது-இரட்டைத் திருப்பதி (தேவபிரான்)
சனி-தென்திருப்பேரை


நவதிருப்பதிகள் நம்மாழ்வாரால் பாடப்பட்டவையாகும். திருவாய்மொழியில் இப்பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன.




கும்பிடப்போன தெய்வம்


தமக்கு குருவாக உபதேசம் செய்யத் தகுந்தவர் பெரியநம்பிகள் என்பதை ராமானுஜர் உணர்ந்தார். தான் இருந்த காஞ்சிபுரத்திலிருந்து குரு பெரியநம்பி இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு கிளம்பினார். அதேசமயத்தில் பெரியநம்பி, தனக்குபின் ஸ்ரீரங்கத்திலிருக்கும் வைணவபீடத்தை ராமானுஜரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சில அடியவர்களுடன் காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே இந்த முடிவை எடுத்து வந்து கொண்டிருந்தது தான். ராமானுஜரும், பெரியநம்பியும் ஸ்ரீரங்கத்திற்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையில் மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் கோயிலில் சந்தித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் சந்தித்தபோது ''கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி'' என்று பேரானந்தம் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜரை அன்பினால் கட்டித் தழுவினார். மதுராந்தகம் கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் பெரியநம்பிகள், ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் என்னும் மந்திர உபதேசம் செய்து வைத்தார்.


'சக்தி' ஏகாதசி


விரத தினங்கள் பல இருந்தாலும் மற்ற விரதங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு சக்தி ஏகாதசிக்கு உண்டு. மற்ற விரதங்களில் பூஜை முடித்ததும் உணவு உண்ணலாம். ஆனால், ஏகாதசி நாளில் மட்டும் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும் என்று விரத நூல்கள் கூறுகின்றன. விஷ்ணு யோகநித்திரையாகிய அறிதுயிலில் இருந்த போது, அசுரன் ஒருவனைக் கொல் வதற்காக பெருமாளின் உடலில் இருந்து தோன்றிய பெண் சக்தியே ''ஏகாதசி'' ஆவாள். அவளுக்காகவே இறைவன் இந்த விரதத்தை ஏற்படுத்தியதாக பத்மபுராணம் குறிப்பிடுகிறது. மகாவிஷ்ணு ஆமைவடிவமாகவும், தன்வந்திரியாகவும், மோகினி யாகவும் அவதாரம் எடுத்த நாளும் ஏகாதசியாகும்.




ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?


ஏகாதசிக்கு முதல்நாள் தசமியன்று பகலில் ஒருவேளை உணவு மட்டும் உண்ண வேண்டும். அன்று இரவில் சாப்பிடக்கூடாது. ஏகாதசிக்கு மறுநாள் துவாதசிநாளில் பகலில் ஒருவேளை மட்டும் உண்ணலாம். இப்படியாக மூன்று நாட்கள் விரதமாக இவ்விரதம் அமைந் துள்ளது. தொடர்ந்து விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள அசுத்தங்கள், கெட்டவாயுக்கள் வெளி யேறுகின்றன. குடல் தூய்மை பெறுகிறது. வயிறு தன் பணியிலிருந்து ஓய்வுஎடுத்துக் கொள்கிறது. மனம் சலனம் இல்லாமல் இறைசிந்தனை பெறுகிறது. பலவித எண்ணங் களில் அலைபாயாமல் ஒருமுகப்படுவதால் நம் மனோசக்தி அதிகரிக்கிறது. இதனால், மற்ற விரததினங்களைக் காட்டிலும் ஆரோக்கியம் தருவதில் ஏகாதசி விரதம்மிக முக்கியத்துவம் பெறுகிறது."

No comments: