சுதந்திரத்திற்காக போராடிய பெண் தியாகி, பிழைப்புக்காக போராடுகிறார் இன்று: ஐகோர்ட் கிளை பதிவாளரிடமும் மனு: தினமலர்: "சுதந்திரத்திற்காக போராடிய பெண் தியாகி, பிழைப்புக்காக போராடுகிறார் இன்று: ஐகோர்ட் கிளை பதிவாளரிடமும் மனு
ஜனவரி 08,2009,00:00 IST
மதுரை: இந்திய சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று, கணவருடன் பலமுறை சிறை சென்ற தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி, எல்.பி.ஜி., காஸ் டீலர்ஷிப் பெற போராடி வருகிறார். நேற்று மதுரை ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் மனு வழங்கினார்.ஆண்டிப்பட்டி பாலாஜிநகரைச் சேர்ந்தவர் ரெங்கம்மாள்(85). இவரது கணவர் குருசாமி. இருவரும் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றுள்ளனர்.'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் குருசாமிக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. ரெங்கம்மாள் கர்ப்பமாக இருந்ததால் தப்பினார். மதுரைக்கு காந்தி, வினோபா வந்தபோது இவர்களும் பங்கேற்றுள்ளனர்.
குருசாமிக்கு மத்திய அரசு தாமிரபட்டயமும், தியாகிகள் பென்ஷனும், ரெங்கம்மாளுக்கு தமிழக அரசு தியாகிகள் பென்ஷனும் வழங்கின. குருசாமி 1985ம் ஆண்டில் இறந்து விட்டார். இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதியைச் சந்தித்து மனு கொடுக்க ரெங்கம்மாள் நேற்று வந்தார். பிறகு அவர் பதிவாளர் அமீர்ஜானிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2008ம் ஆண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் காஸ் டீலர்ஷிப்புக்காக விண்ணப்பித்தேன். கும்முடிப்பூண்டியில் நடந்த நேர்முகத் தேர்விலும் பங்கேற்றேன். மாநில அரசு பென்ஷன் பெறுவதால் டீலர்ஷிப் வழங்க முடியாது என மறுத்து விட்டனர்.
தமிழக சுதந்திரத்திற்காக மட்டும் நான் போராடவில்லை. இந்திய சுதந்திரத்திற்காகத் தான் போராடினேன். இளமை, சொத்துக்களை தியாகம் செய்துள்ளேன். ஆங்கிலேயர்கள் கூட என்னை இழிவாக நடத்தவில்லை; டீலர்ஷிப் வழங்க மறுத்து என்னை இழிவுப்படுத்தி விட்டனர்.ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய 20 பெண் தியாகிகளில் தற்போது நான் மட்டுமே உயிருடன் இருப்பதாக அறிகிறேன்.
காஸ் டீலர்ஷிப் வழங்கக் கோரி கடந்த டிச., 15ம் தேதி வீட்டில் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபட்டேன். ஆண்டிப்பட்டி தாசில்தார், பெரியகுளம் ஆர்.டி.ஒ., வந்து 'அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பதாக' தெரிவித்தனர். லோக்சபாத் தேர்தலைக் காட்டி என் கோரிக்கையைத் தள்ளிப்போடும் அவலம் உள்ளது. காஸ் டீலர்ஷிப் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் ரெங்கம்மாள் கூறியுள்ளார். ரெங்கம்மாள் கூறுகையில், 'தற்போது கிடைக்கும் பென்ஷன் போதியதாக இல்லை. வாழ் நாட்களை எண்ணிக்கொண்டுள்ள எனக்கு இனியும் தாமதிக்காமல், வாழ வழிசெய்தால் நல்லது' என்றார்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 8, 2009
சுதந்திரத்திற்காக போராடிய பெண் தியாகி, பிழைப்புக்காக போராடுகிறார் இன்று: ஐகோர்ட் கிளை பதிவாளரிடமும் மனு: தினமலர்
Posted by
Arul
at
Thursday, January 08, 2009


No comments:
Post a Comment