Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 9, 2009

தமிழகம் முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு: கிடைக்கின்ற இடங்களில் முண்டியடித்த வாகன ஓட்டிகள்: தினமலர்

தமிழகம் முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு: கிடைக்கின்ற இடங்களில் முண்டியடித்த வாகன ஓட்டிகள்: தினமலர்: "தமிழகம் முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு: கிடைக்கின்ற இடங்களில் முண்டியடித்த வாகன ஓட்டிகள்

ஜனவரி 09,2009,00:00 IST

சென்னை: லாரிகள் ஸ்டிரைக், பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம் போன்றவற்றால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. கிடைத்த இடங்களில் முண்டியடித்து கூட்டம் நின்றதால், அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. சில இடங்களில் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரி லாரி உரிமையாளர்களும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பொதுத்துறை எண்ணெய் நிறுவன ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


லாரிகள் ஸ்டிரைக்கிற்கு, டேங்கர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். லாரிகள் ஸ்டிரைக் தொடர்வதால் காய்கறி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதே சமயம் எண்ணெய் நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளிலும், அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இயங்கும் பெரும்பாலான பெட்ரோல் 'பங்க்'கள் ஸ்டாக் இல்லாமல் நேற்று மூடப்பட்டு விட்டன. திறந்திருந்த ஒரு சில 'பங்க்'களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் முண்டியடித்து பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர்.


இதனால், அங்கு வாகனங்கள் மணிக்கணக்கில், நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசலை நிரப்பிச் சென்றன. சென்னையில் மட்டுமல்லாது புறநகர் பகுதியிலும் நேற்று இதே நிலை காணப்பட்டது. சில 'பங்க்'களில் பற்றாக்குறையை ஒட்டி, பெட்ரோலின் விலையை இஷ்டத்திற்கு உயர்த்தி விற்றனர். கொச்சியில் இருந்து ரயில் வேகன்களில் வரும் பெட்ரோல், டீசல் போன்றவற்றை நெல்லையில் இறக்கி பின், லாரிகள் மூலம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. வழக்கமாக தினமும் 80 லாரிகளில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், லூப்ஆயில் அனுப்பப்படும். ஸ்டெர்லைட் மற்றும் தனியார் மில்களுக்கு பர்னஸ் ஆயிலும் லாரிகளில் அனுப்பப்படும். ஸ்டிரைக் காரணமாக 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு பர்னஸ் ஆயில் சப்ளையாகவில்லை. நேற்று கொச்சியில் இருந்து ரயில் வேகன்களில் வந்த எரிபொருள் இறக்கப்பட்டது. ஆனால், நேற்றும் லாரிகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் அனுப்பப்படவில்லை. நெல்லையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பல பெட்ரோல் 'பங்க்'களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.


நாமக்கல்: நாமக்கல் மற்றும் சேலத்தில் கையிருப்பு வைத்திருக்கும் ஒரு சில பெட்ரோல் 'பங்க்'களில், போலீஸ் பாதுகாப்புடன் பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லாரி ஸ்டிரைக் எதிரொலியாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நூல் வர்த்தகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. அதே போல் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்னையை சமாளிக்க போலீஸ் பாதுகாப்புடன் முட்டை லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மதுரையில் பரிதவித்த பொதுமக்கள்: மதுரை மண்டலத்திற்கு தேவையான பெட்ரோல், டீசல் சென்னை, நாகப்பட்டினம், மங்களூரு போன்ற இடங்களில் இருந்து பைப்-லைன்கள் மூலம் பெறப்படுகிறது. திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள டெர்மினல்களில் பெறப்பட்டு 16 மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. ஸ்டிரைக் காரணமாக பெட்ரோல், டீசல் சப்ளை தடைப்பட்டுள்ளது. மதுரையில் 'பங்க்'கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.


மதுரையில் பெட்ரோல், டீசல் பிடிப்பதில் பல 'பங்க்'களில் இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பெட்ரோல், டீசல் சப்ளை நடந்தது. ஒரு சிலர் கேன், பாட்டில்களில் வாங்கினர். சிலர் வழக்கமாக வாங்குவதை விட மூன்று மடங்கு கூடுதலாக வாங்கியதால் பெட்ரோல், டீசல் அதிகளவில் விற்பனையானது. சிலர் கூடுதலாக வாங்குவதற்கு, பின்னால் வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மோதலும் நடந்தது. நேற்று பகல் 1 மணியளவில் பெரும்பாலான 'பங்க்'கள் மூடப்பட்டு 'ஸ்டாக் இல்லை' என எழுதி வைக்கப்பட்டன. இதனால் லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் நிறுத்தப்பட்டன. சில மினி பஸ்களும் டீசல் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டன. மக்கள் அவதிக்குள்ளாயினர்.


வாகன ஓட்டிகள் அலைச்சல்: கோவையில் பெட்ரோலுக்காக வாகன ஓட்டிகள் பல இடங்களில் அலைந்ததைக் காண முடிந்தது. சாதாரண பெட்ரோலுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியை பயன்படுத்திக் கொண்ட சில பெட்ரோல் 'பங்க்'கள், உயர்ரக பெட்ரோலை விற்பனை செய்யத் துவங்கியுள்ளன. பெட்ரோல், டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவது சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக ஜெனரேட்டரை இயக்கிவந்த தொழில் நிறுவனங்கள், தேவையான டீசல் கிடைக்காததால் கவலை அடைந்துள்ளன.

மாநில அரசு தலையிட வேண்டும் : எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மட்டுமே ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்; தொழிலாளர்கள் பங்கேற்கவில்லை. எண்ணெய் நிறுவன தொழிலாளர்கள் பணியில் உள்ள நிலையில், தற்போது 'கமாண்டிங் ஆபீசர்' என்ற நிலையில் மட்டுமே ஒருவர் தேவைப்படுகிறார். அதிகாரிகளின் ஸ்டிரைக்கை ஒடுக்கும் வகையில், இந்தப் பணியை செய்ய ஆட்களை அதிரடியாக மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெட்ரோல் 'பங்க்' ஸ்டிரைக் அறிவிப்பு வெளியிட்ட போது, தமிழக அரசு கடுமையாக எச்சரிக்கைவிட்டது. அதே பாணியில், போராட்டத்தில் உள்ள டேங்கர் லாரி உரிமையாளர்களையும் எச்சரித்து பணியில் ஈடுபட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

No comments: