Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

பழநி அருகே கற்கால மனிதர்கள் ஓவியங்கள் கண்டுபிடிப்பு: தினமலர்

பழநி அருகே கற்கால மனிதர்கள் ஓவியங்கள் கண்டுபிடிப்பு: தினமலர்: "பழநி அருகே கற்கால மனிதர்கள் ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

பழநி : பழநி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழநி அருகே உள்ளது பாப்பம்பட்டி நரிப் பாறை. இங்குள்ள மலை உச்சியில் உள்ள இரண்டு குகைகளில் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது பற்றி தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, டாக்டர்.மணிவண்ணன், நாட்ராயன் ஆகியோர் கூறியதாவது:பழநிக்கு மேற்கே 20 கி.மீ., தூரத்தில் குதிரையாற்றின் கரையோரம் 1000 அடி உயரமுள்ள நீண்ட மலைத்தொடர் உள்ளது. இதில் நரிப்பாறை என்ற மலை உச்சியில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. இந்த குகைகளில் தான் கற்கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஒரு குகையில் கற்கால மனிதர்கள் வேட்டையாட கிளம்பி செல்லும் நிகழ்வு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.தற்போது உள்ள ஓவியத்தில் ஒரு மனிதன் வேட்டை குழுவை நடத்தி செல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு பின்புறம் ஒரு மனிதன் ஒரு விலங்கின் மீது அமர்ந்து செல்வது போல் வரையப்பட்டுள்ளது. அமர்ந்து செல்லும் மனிதன் இந்த குழுவின் தலைவனாக இருக்கலாம். நடந்து வருபவனின் ஒரு கையில் கல் கோடாரி உயர்த்தி பிடித்து வருவது போல் வரையப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஓவியத் தொடருக்கு கீழே உள்ள ஓவியத்தில் ஒரு மனிதன் படகு ஒன்றில் அமர்ந்து அதை துடுப்பு போட்டு இயக்குவது போல் வரையப்பட்டுள்ளது. விலங்கின் மேல் அமர்ந்து செல்லும் மனிதனின் படம் குதிரையை குறிப்பதாகவும், படகு செல்லும் ஆறு, இந்த மலை அடிவாரத்தில் ஓடும் குதிரையாற்றை குறிப்பதாகவும் கொள்ளலாம். குதிரையாறு தமிழ் சங்க இலக்கியங்களில் குதிரையாறு என்றும், மலை முதிரை மலை என்றும் அழைக்கப்படுகிறது. குகையில் உள்ள மொத்த ஓவியங்களும் சாம்பல் நிறத்தில் உள்ளன. மனிதர்களும், விலங்குகளும் குச்சி குச்சியாக வரையப்பட்டுள்ளன.அடுத்த குகையில் ரத்தச்சிவப்பு நிறத்தில் ஏழு கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோடுகள் சராசரியாக 13 செ.மீ., நீளமும், 7 செ.மீ., உயரமும் உள்ளவையாக உள்ளன. இந்த கோடுகள் தமிழர்களின் பண்டைய தெய்வங்களான ஏழு கன்னிமார்களை குறிப்பதாக கொள்ள வேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகத்திலேயே 7 கன்னிமார் உருவங்கள் கிடைத்துள்ளன. இது வரை தமிழகத்தில் கிடைத்துள்ள 7 கன்னிமார் உருவங்களில் கற்காலத்தை சேர்ந்த இந்த அடையாளமே மிகப்பழமையானதாகும்.இரண்டு குகைகளிலும் கற்காலத்தை சேர்ந்த கற்கருவிகள் ஏராளமான அளவில் கிடக் கின்றன. ஆகவே இந்த குகை பழங்கற்கால தமிழ் மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பானை ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. பெருங்கற்காலத்தை சேர்ந்தவை இந்த பானை ஓடுகள். ஆகவே பழைய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரை அதாவது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும்' என்றனர்."

No comments: