Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

பாலூட்டும் அன்பிலே அன்னை நியே !: தினமலர்

பாலூட்டும் அன்பிலே அன்னை நியே !: தினமலர்: "பாலூட்டும் அன்பிலே அன்னை நியே !

ஜனவரி 15,2009,00:00 IST

பசுக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ அருளும் கோபிநாதசுவாமி, திண்டுக்கல் அருகிலுள்ள ரெட்டியார்சத்திரத்தில் அருளுகிறார். மாட்டுப்பொங்கல் தினமான இன்று இவரது தரிசனம் பெறுவோம்.
தல வரலாறு: வடநாட்டில் பசுக்களை மேய்த்து வந்த ஒரு தாயும், மகனும் பசுக்களுடன் இங்கு வந்தனர். ஒருசமயம், இங்கு பஞ்சம் ஏற்படவே பல பசுக்கள் மடிந்தன. பசுக்களின் மீது அன்பு கொண்ட அந்த பசுமேய்ப்போன், பசுக்களின் உயிரை எடுப்பதற்குப் பதிலாக, தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தான். பஞ்சம் நீங்கியது. பசுக்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, தான் வேண்டியபடி உயிரை விட்டான். மகனை இழந்த தாயும் உயிர் விட்டாள்.


இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர், பசுக்களைக் காக்க ஆயர்பாடியிலிருந்து கிருஷ்ணரும், யசோதையுமே இங்கு வந்து உயிரைத் தியாகம் செய்ததாகக் கருதி அவர்களை மானசீகமாக வணங்கி வந்தார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், இம்மலையைச் சுட்டிக் காட்டி அவ்விடத்தில் அந்த தாய்க் கும், மகனுக்கும் கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி பக்தர் அவர்களுக்கு சிலை வடித்தார். சுவாமிக்கு கோபிநாதர் என்றும், அவரது தாயாருக்கு கோப்பம்மாள் என்றும் பெயர் சூட்டினார்.


பிரார்த்தனை தலம்: பசுக்களுக்கான பிரார்த்தனை தலமாக இக்கோயில் திகழ்கிறது. பசுக்கள் கருத்தரிக்கவும், அவை நோயின்றி வாழவும், அதிக பால் சுரக்கவும் விவசாயிகள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அப்பசுக்கள் முதன்முதலில் சுரக்கும் பாலைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பால் சாதம் படைத்து, துளசி மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பசுக்களின் உருவ பொம்மையும் செய்து வைப்பதுண்டு. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையும், இம்மலையில் விளையும் தர்ப்பைப்புல்லையும் பசுக்களுக்குக் கொடுத்தால், அவை நோயின்றி வாழும் என்கிறார்கள்.


பொங்கல் விசேஷம்: தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல் நாட்களில் சுவாமிக்கு பால், தயிர், வெண்ணெய், நெய் அபிஷேகம் நடக்கிறது. பசு வளர்ப்போர், மாட்டுப் பொங்கல் தினத்தன்று பசு முன்பாக நின்று, ''கோபிநாத சுவாமி அருளால் பட்டி (பசு) பெருக! பால் பானை பொங்க!'' என்று சொல்லி பசுவைச் சுற்றி வந்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.


தாய்க்கு முதல் பூஜை: 620 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. புல்லாங்குழல் வாசித்தபடி கோபிநாதர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் கன்றுக்கு பால் கொடுக்கும் பசுவின் சிலை இருக்கிறது. கோபிநாதருக்கு நடக்கும் மூன்று கால பூஜையின்போதும் சேகண்டி ஒலித்து, சங்கு முழக்கும் வழக்கம் உள்ளது. சங்கு, மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும், சுவாமியின் ஆயுதங்களில் ஒன்று என்பதாலும் இவ்வாறு செய்கின்றனர். சன்னதி முன் மண்டபத்தில் கோப்பம்மாள் காட்சி தருகிறார். பிள்ளையை விட தாய்க்கே முக்கியத்துவம் தர வேண்டுமென்பதன் அடிப்படையில், இவரை பூஜித்தபின்பே கோபிநாதருக்கு பூஜை செய்கின்றனர். தாயும், பிள்ளையும் காட்சி தரும் தலம் என்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பிள்ளைகள் பெற்றோர் மீது பாசத்துடன் இருக்கவும், பெண்கள் தங்கள் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். மலையடிவாரத்தில் கருடாழ்வார், ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் உள்ளன.இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா 3 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவின்போது மட்டும் உற்சவர் கிருஷ்ணர் மலையிலிருந்து புறப்பாடாகி, வீதியுலா சென்று, நான்காம் நாள் கோயிலுக்குத் திரும்புகிறார். சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.


இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள ரெட்டியார்சத்திரம் சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ரெட்டியார்சத்திரத்தில் இருந்து பஸ், ஆட்டோ வசதி குறைவு. சனிக்கிழமைகளில் திண்டுக்கல்லில் இருந்து கோயில் வரை ஸ்பெஷல் பஸ்கள் செல்கிறது.திறக்கும் நேரம்: காலை 8- மாலை 5 மணி.போன்: 0451- 2554 324, 2554 241, 98420 12922."

No comments: